கேரளா:பினராயி விஜயன் புதிய மந்திரி சபையில் சைலஜா டீச்சருக்கு இடமில்லை

null

திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி மீண்டும் அமோக வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளை இந்த கூட்டணி கைப்பற்றியது. இதனால் பினராயி விஜயன் மீண்டும் முதல்வர் ஆவது உறுதியானது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகும் பினராயி விஜயன் பதவி ஏற்காமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று நடந்த கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் வரும் 20-ம் தேதி 21 மந்திரிகளுடன் பினராயி விஜயன் முதல்வராக பதவி ஏற்பதாக அறிவிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 மந்திரிகளும், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 4 மந்திரிகளும், ஜனதாதள எஸ், கேரள காங்கிரஸ் எம், என்.சி.பி ஆகிய கட்சிககுக்கு தலா ஒரு மந்திரி வீதமும் வழங்கப்படும். பாக்கி உள்ள இரண்டு மந்திரிகள் பதவியும் மீதமுள்ள நான்கு கட்சிகளுக்கு தலா இரண்டரை ஆண்டுகள் வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 21 மந்திரிகளுக்கான துறை குறித்து முதல்வர் பினராயி விஜயன் முடிவு செய்வார் எனவும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பினராயி விஜயனின் இரண்டாவது ஆட்சி காலகட்டத்தில் அனைத்து மந்திரிகளும் புதுமுகமாக இருப்பார்கள் எனவும், கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த கே.கே. சைலஜா டீச்சருக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என முன்னர் தகவல்கள் வெளியானது.

ஏனென்றால் கடந்த எல்.டி.எஃப் கூட்டணி ஆட்சியில் முதல்வர் பினராயி விஜயனுக்கு அடுத்தபடியாக மக்களிடம் அதிக செல்வாக்குமிக்கவராக இருந்தவர் கே.கே.சைலஜா டீச்சர். ஓகி புயல், மழை வெள்ள பிரளயம், நிப்பா வைரஸ், கொரோனா பெருந்தொற்று ஆகிய காலங்களில் சிறப்பாக செயல்பட்டதாக சர்வதேச அளவில் கவனம் பெற்றவர் அவர்.

எனவே தான் அவர் மீண்டும் சுகாதாரத்துறை மந்திரியாக ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கே.கே.சைலஜா டீச்சர் மீண்டும் மந்திரியாக ஆக வாய்ப்பு இல்லை என்ற தகவல் இன்று வெளியாகியுள்ளது. முதல்வர் பினராயி விஜயனைத் தவிர அனைவரும் புதிய நபர்களை நியமிக்க வேண்டும் என்று கட்சி தீர்மானித்ததைத் தொடர்ந்து கே.கே.சைலஜா டீச்சர் மீண்டும் மந்திரியாகும் ஆக வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

Author: sivapriya