தடுப்பூசி விநியோகத்தை விரைவுபடுத்தவும், முன்கூட்டியே வழங்கவும் நடவடிக்கை : பிரதமர் மோடி உறுதி

null

புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 46 மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனையில் நடத்தினார். ஆலோசனையில் மாநில முதல்-அமைச்சர்கள், அதிகாரிகள், சுகாதாரச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கர்நாடகா, பீகார், அசாம், சண்டிகார், தமிழ்நாடு, உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் கோவா, இமாச்சல பிரதேசம் மற்றும் டெல்லி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அரசு உயரதிகாரிகள், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி

கொரோனாவுக்கு எதிரான போரில் நீங்கள் அனைவரும் மிக முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். நம் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு சவால்கள் உள்ளன. உங்கள் மாவட்டத்தின் சவால்களை நீங்கள் நன்கு புரிந்துகொள்கிறீர்கள். உங்கள் மாவட்டம் வெல்லும்போது நாடும் வெல்கிறது. உங்கள் மாவட்டம் தோற்கும்போது நாடும் தோற்கிறது.

கொரோனாவின் இரண்டாவது அலைகளில் கிராமப்புற, தொலைதூரப் பகுதிகள் குறித்து நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்

கொரோனாவுக்கு எதிரான போரில் நீங்கள் அனைவரும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறீர்கள். ஒரு வகையில், நீங்கள் கொரோனா போரின் கள தளபதிகள். கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றது. அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முதல் அலையின் போது, இந்தியா விவசாயத் துறையை மூடவில்லை. கிராம மக்கள் எவ்வாறு வயல்களில் சமூக தூரத்தை பராமரிக்கிறார்கள் என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.

கிராமங்கள் தகவல்களைப் புரிந்துகொண்டு அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கின்றன. இது கிராமங்களின் வலிமை

மாவட்டங்களில் கொரோனாவைக் கட்டுப்படுத்தப் பரிசோதனையைத் தீவிரப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் ஆக்சிஜன் ஆலை நிறுவும் பணி பிரதமர் கேர் நிதி மூலம் நடக்கிறது. ஏற்கனவே, பல மருத்துவமனைகளில் இந்த நிதி மூலம் ஆக்சிஜன் ஆலைகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

வைரசுக்கு எதிரான போரில், உள்ளூர் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலம், வேகமான பரிசோதனை மற்றும் சரியான, முழுமையான தகவல்களை மக்களுக்கு அனுப்புதல் ஆகியவை நமது ஆயுதங்களாகும்.

தற்போது, சில மாநிலங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதால், நாம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கே நமது போராட்டம் என்று கடந்த ஒரு வருடமாக நடந்துவரும் அனைத்து கூட்டங்களிலும் நான் கோரிவருகிறேன்.

கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு தடுப்பூசி வலுவான வழி. அது குறித்த அனைத்து கட்டுக்கதைகளையும் நாம் கூட்டாக வேரறுக்க வேண்டும். கொரோனா தடுப்பூசிகளின் விநியோகத்தைப் பெரிய அளவில் அதிகரிக்க தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சுகாதார அமைச்சகம் நெறிப்படுத்துகிறது. அடுத்த 15 நாட்களுக்கான ஒரு கால அட்டவணையை முன்கூட்டியே மாநிலங்களுக்கு வழங்க முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது. இது, அடுத்த 15 நாட்களில் மாவட்டத்தில் எத்தனை பேருக்கு தடுப்பூசி கிடைக்கும் என்பதையும், அதை செலுத்துவதற்கு எப்படி தயாராக வேண்டும் என்பதை அறியவும் உங்களுக்கு உதவும் இவ்வாறு அவர் கூறினார்.

Author: sivapriya