டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

null

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியுள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் மே 24-ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் பலனாக உச்சத்தில் இருந்து வந்த கொரோனா தற்போது குறைந்து வருகிறது.

டெல்லியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,111 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 50,863 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

1. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும்.

2. பெற்றோரில் தாய் அல்லது தந்தை கொரோனா தொற்றால் உயிரிழந்திருந்தாலும் அல்லது தாய், தந்தை இருவரும் கொரோனாவால் உயிரிழந்திருந்தாலும், வீட்டிலிருக்கும் குழந்தை 25 வயது அடையும் வரை ரூ.2,500 மாத ஓய்வூதியமாகத் தரப்படும். ஆதரவற்ற நிலையில் இருக்கும் அந்தக் குழந்தையின் கல்விக்கான முழுச் செலவையும் டெல்லி அரசு பொறுப்பேற்றுக் கொள்ளும்.

3. குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் அல்லது குடும்பத் தலைவர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருந்தால் அந்தக் குடும்பத்துக்கு மாதம் ரூ.2,500 ஓய்வூதியமாக வழங்கப்படும். கொரோனாவால் உயிரிழந்ததற்காக தனியாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

4. கணவர் உயிரிழந்திருந்தால் மனைவிக்கு மாதம் ரூ.2,500 ஓய்வூதியமும், மனைவி உயிரிழந்திருந்தால் கணவருக்கு மாதம் ரூ.2,500 ஓய்வூதியமும் தரப்படும். குடும்பத்தில் திருமணமாகாத நபர், அவர்தான் வீட்டில் வருமானம் ஈட்டுபவராக இருந்து அவர் கொரோனாவில் உயிரிழந்துஇருந்தால் ஓய்வூதியத் தொகை பெற்றோருக்கு வழங்கப்படும். இந்த அறிவிப்புகள் அனைத்தும் டெல்லி அரசின் அமைச்சரவை ஒப்புதல் பெற்றபின் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: sivapriya