சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்: ஒருவர் உயிரிழப்பு; 8 பேர் காயம்

null

குயிங்காய்,

சீனாவின் தென்மேற்கில் யுன்னான் மாகாணத்தில் யாங்பி யீ என்ற சுயாட்சி பகுதியில் நேற்று (வெள்ளி கிழமை) தொடர்ச்சியாக அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. நேற்றிரவு 9 மணியில் இருந்து 11 மணிக்குள் யாங்பி பகுதியில் ரிக்டரில் 5.0 அளவிலான 4 நிலநடுக்கங்கள் பதிவாகின.

இதில், பாறைகள் உருண்டோடி விழுந்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். கற்கள் சரிந்து விழுந்ததில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதேபோன்று சாலையில் 4 பேர் மண்ணிற்குள் புதைந்தனர். அவர்களில் 3 பேர் மீட்கப்பட்டு விட்டனர். இதுவரை 8 பேர் காயமடைந்து உள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

சீனாவின் டாலிக் பகுதியில், நேற்று இரவு 7.18 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியிருந்தது. இதனை அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சீனாவின் குயிங்காய் பகுதியில் நேற்று (வெள்ளி கிழமை) இரவு 11.34 மணியளவில் மற்றொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.0 ஆக பதிவானது. இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இதனால் நகரின் பல பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருள் இழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

சீனாவில் பல்வேறு நகரங்களில், பல்வேறு நேரங்களில் நேற்று அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால், அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.

Author: sivapriya