கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வசதிகள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

null

புதுடெல்லி,

கொரோனா வைரசுக்கு பெற்றோர்களைப் பறி கொடுத்து, அனாதைகளாக குழந்தைகள் ஆகிற நிலை பல இடங்களில் உள்ளது. இதேபோன்று கணவரை இழந்து மனைவி தவிப்பதும், பிள்ளைகளை மூத்த குடிமக்கள் இழந்து நிர்க்கதியாக நிற்பதும் ஆங்காங்கே நடக்கிறது. இத்தகைய சம்பவங்கள் பரிதவிக்க வைப்பதாக உள்ளன. அதேநேரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கிறவர்களைப் பாதுகாக்க வேண்டிய சமூகக்கடமை முக்கியமானதாக இருக்கிறது.

தற்சமயம், பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களைத்தடுப்பதற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும், ஆட்கடத்தலைத் தடுப்பதற்கு அமைப்புரீதியிலான வழிமுறைகளை அமைத்து வருகிறோம் என்று மத்திய அரசு கூறுகிறது.

அதே நேரத்தில் இதையொட்டி மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு ஒரு அறிவுறுத்தலை வழங்கி உள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் பிறப்பித்துள்ள அிறிவுரைக்குறிப்பில் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள்:-

* கொரோனாவின் 2-வது அலையின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்படக்கூடிய பிரிவினர், குறிப்பாக பெற்றோரை இழந்து தவிக்கிற குழந்தைகள் மீது மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்ய வேண்டும்.

* அனாதையாக இருக்கும் குழந்தைகள், சரியான நேரத்தில் உதவியும், ஆதரவும் தேவைப்படுகிற மூத்த குடிமக்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு தற்போது கிடைக்கிற வசதிகளை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

* மாவட்டங்களில் போலீஸ் நிலையங்கள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவுகளில் பெண்களைக்கொண்டு உதவும் அமைப்பை ஏற்படுத்தி திறம்பட பயன்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Author: sivapriya