ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம்; பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் மூன்றாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் மூன்றாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி உயிரிழந்தோர் புகைப்படங்களுக்கு மலர்தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். குமரெட்டியபுரம் கிராமத்தில் 13 பேரின் புகைப்படங்களுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் அஞ்சலி செலுத்தினர். பண்டாரம்பட்டி, மீளவிட்டான், திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் 13 பேருக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.     

இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை தமிழக அரசு நேற்று வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இதற்கு, எதிர்ப்பாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Facebook Comments Box
Author: sivapriya