ஆசியாவின் 2-வது பெரிய பணக்காரர் அதானி… முதலிடத்தில் தொடரும் முகேஷ் அம்பானி!

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரராக உயர்ந்திருக்கிறார். சர்வதேச அளவில் பணக்காரர்கள் பட்டியலில் 14-ம் இடத்தில் உள்ளார். அதானியின் சொத்து மதிப்பு 66.5 பில்லியன் டாலர்கள். ஆசிய பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருக்கிறார். புளும்பெர்க் தகவல்படி இவரின் சொத்துமதிப்பு 76.5 பில்லியன் டாலர்கள் ஆகும்.

அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு சுமார் 8.36 லட்சம் கோடியாக இருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் (2021-ம் ஆண்டு) இருந்து இதுவரை குழுமத்தின் சந்தை மதிப்பு இரு மடங்குக்கு உயர்ந்திருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் இவரது சொத்து மதிப்பு 32.7 பில்லியன் டாலர் உயர்ந்திருக்கிறது. ஆனால், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் சிறிய சரிவு ஏற்பட்டிருக்கிறது.

image

கொரானா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு அதிக வளர்ச்சி அடைந்த குழுமம் அதானி குழுமம். கடந்த ஆண்டு மார்ச் (2020) முதல் இதுவரை இந்த குழுமத்தின் சந்தை மதிப்பு 6.5 மடங்குக்கு உயரந்திருக்கிறது. ஆனால், இதே காலத்தில் சென்செக்ஸ் 68 சதவீதமும் ரிலையன்ஸ் பங்கு 78 சதவீதம் அளவுக்கு மட்டுமே உயர்ந்திருக்கின்றன. எனினும், கடந்த இரு ஆண்டுகளாக இந்தியாவின் முகேஷ் அம்பானி ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

டாடா குரூப் மற்றும் ரிலையன்ஸ் குரூப் ஆகிய குழுமத்துக்கு பிறகு 100 பில்லியன் சந்தை மதிப்பைக் கொண்ட குழுமமாக அதானி திகழ்கிறது.

அதானி க்ரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ் அண்ட் எஸ் இ இசட், அதானி டிரான்ஸ்மிஸன், அதானி டோட்டல் கேஸ், அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி பவர் ஆகிய ஆறு பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

Author: sivapriya