புல்லட் ரயிலை நடத்துனரிடம் கொடுத்துவிட்டு கழிப்பறைக்குச் சென்ற ஓட்டுநர்!

ஜப்பானில் இயற்கை உபாதை கழிக்க 150 கிமீ வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்த ரயிலை விட்டு, கழிப்பறைக்கு சென்ற ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஜப்பானில் கடந்த 16 ஆம் தேதி டோக்கியோ நகரத்தில் இருந்து ஒசாகாவிற்கு சென்ற ஹிகாரி 633 புல்லட் ரயில் ஒன்று இலக்கை வந்தடையும் நேரத்திற்கு பதிலாக 1 நிமிடம் தாமதமாக வந்தது. அதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரயில் தாமதத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரயிலை இயக்கிய ஓட்டுநர் இயற்கை உபாதைக்காக ரயில் இயங்கிக்கொண்டிருந்த போதே சில நிமிடங்கள் கழிப்பிடத்திற்குச் சென்றதும், அந்த நேரத்தில் ரயிலை இயக்க உரிமம் இல்லாத நடத்துனர் ரயிலை இயக்கியதும் தெரியவந்தது.

160 பயணிகளை ஏற்றிக்கொண்டு 150 கிமீ வேகத்தில் ரயில் சென்று கொண்டிருந்த இந்தச் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. நல்ல வேளையாக அசாம்பவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. இது தொடர்பாக மன்னிப்பு கோரிய ஜப்பான் ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர், “ஓட்டுநரின் இந்த செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாத பொருத்தமற்ற செயல். இது தொடர்பாக ஓட்டுநர் மற்றும் நடத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Author: sivapriya