12 இலக்க பெருக்கல் கணக்கிற்கு 10 நிமிடத்தில் தீர்வு ;ஆட்டிசம் பாதிப்புள்ள சிறுமி சாதனை

ஆட்டிசம் பாதிப்புள்ள 11 வயது சிறுமி ஒருவர் 12 இலக்க எண்களை 10 நிமிடத்தில் பெருக்கி உலக சாதனைப் படைத்துள்ளார்.

புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த சிறுமி சனா ஹிரேமத் 2 வயதிலேயே ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர். அதனால் இவரது பெற்றோர்கள் வீட்டில் இருந்த படியே அவருக்கு கல்வியை வழங்கிவந்த நிலையில், தற்போது சிறுமி இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

சிறுமியின் சாதனை குறித்து அவரது அம்மா ப்ரியா ஹிரேமத் கூறும் போது, “ வீட்டில் ஒரு நாள் பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்த போது, அவளுக்கு பெருக்கல் தொடர்பான கணக்குகளை முதன்முறையாக அறிமுகப்படுத்தினோம். அதற்கு அவள் உடனடியாக பதில் கூறினாள்.” என்றார்.

அவரது தந்தை கூறும் போது, “ சனா ஹிரேமத் மனித கால்குலேட்டராக இருப்பது மட்டுமில்லாமல் சிக்கலான கணக்குகளுக்கும் அவளால் தீர்வு காண முடிகிறது. ஆட்டிசம் பாதிப்புடைய அவளால் பென்னையோ, பென்சிலையோ ஒழுங்காக பிடிக்க முடிவதில்லை. அதன் காரணமாக அவள் 2 வது கிரேடு கணக்கு பாடத்தில் தோல்வி அடைந்தாள்” என்றார்.

12 இலக்க எண்களை 10 நிமிடத்தில் பெருக்கி அதற்கான தீர்வை கண்டிருக்கிறார் இந்தச் சிறுமி. அதிகாரிகள் எண்களை தேர்வு செய்யும் போது கூட சிறுமி அந்த அறையில் அனுமதிக்கப்படவில்லை. அந்த அறைக்கு செல்லும் வழியிலும் அவளது கண்கள் மூடப்பட்டிருந்தது.

Author: sivapriya