மம்தாவை தோற்கடித்த சுவேந்து அதிகாரியின் குடும்பத்தினருக்கு Y+ பாதுகாப்பு

மேற்குவங்க பாஜக எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரியின் தந்தை மற்றும் அவரது சகோதரருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய்+ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. ஆனால், கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். எனினும், ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெற்றதால் மீண்டும் முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றார். 

இதற்கிடையில், சுவேந்து அதிகாரியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாலும் அவர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்பதாலும் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியிருந்தது. இந்த நிலையில் சுவேந்து அதிகாரியின் தந்தை சிசிர் குமார் அதிகாரி மற்றும் அவரது சகோதரர் திபெந்து அதிகாரி ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய்+ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. மத்திய பாதுகாப்பு முகமை மேற்கு வங்கத்தில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்தப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒய்+ பிரிவு பாதுகாப்பில் ஒரு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் 11 ஆயுதமேந்திய காவலர்கள், கமாண்டோக்கள் இடம்பெறுவார்கள். 

மேற்குவங்க மாநிலத்தில் கந்தி மக்களவைத் தொகுதியின் எம்பியாக இருக்கும் சுவேந்து அதிகாரியின் தந்தை சிசிர் குமார், கடந்த மார்ச் மாதம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். அதேபோல அவரது சகோதரரான திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த திபெந்து ஆதிகரி தம்லூக் தொகுதியின் எம்பியாக இருக்கிறார். முன்னதாக மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு பாஜக சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 77 எம்.எல்.ஏ.க்களுக்கும் பல்வேறு பிரிவுகளில் மத்திய பாதுகாப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box
Author: sivapriya