அறிவிப்பு வெளியானவுடன் திறந்த கடைகள்; பொருட்கள் வாங்க திரண்ட மக்கள் கூட்டம்

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் திரண்டனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் திங்கள் கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. திங்கள் முதல் பால் கடைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க்குகள், உணவகங்கள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்படுகின்றன. இந்நிலையில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க 2 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தின் நகரங்களிலும் கிராமங்களிலும் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.

மதுரை கீழமாசி வீதியில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யத்திலும் அதன் அருகிலுள்ள தலைஞாயிறு, ஆயக்காரன்புலம், வாய்மேடு, தாணிக்கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளலும் அரசு அறிவிப்பு வெளியான உடன் பல கடைகள் திறக்கப்பட்டன. எனினும் மாலை நேரத்திற்கு பின்பே மக்கள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதே போல வேதாரண்யத்திலிருந்து நாகப்பட்டினம், திருச்சி, ராமேஸ்வரம், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு பேருந்து போக்குவரத்தும் தொடங்கியது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பலசரக்கு கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் உடனே திறக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாள் என்பதால் சிறிய ஜவுளி்க்கடைகள், ரெடி மேட் கடைகளும் திறக்கப்பட்டன. இதற்கிடையில் தூத்துக்குடியில் ஊரடங்கில் கூட்டம் கூடுவதை தடுக்க மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்படும் என கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

Author: sivapriya