தமிழகத்தைவிட பிறமாநிலங்களுக்கு அதிக தடுப்பூசிகள்: பிரதமரிடம் சுட்டிக்காட்ட ஓபிஎஸ் கோரிக்கை

ஆந்திரா, பீகார், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் தமிழகத்தை விட கூடுதலாக தடுப்பூசிகளை பெற்றிருப்பதை பிரதமரிடம் சுட்டிக்காட்டி, தேவையான அளவு தடுப்பூசிகளை பெற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியிருக்கிறார்.  

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்ட 18 முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி திட்டத்தில் போதிய அளவில் தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என அதிகாரிகள் சொன்னதாக பத்திரிகை செய்திகள் வந்துள்ளன. தடுப்பூசி போட மருத்துவமனைகளை நாடிய இளைஞர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது, இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கவும் வழிவகுத்தது. இணையதளம் மூலமாக தடுப்பூசிக்கு பதிவு செய்தால் ‘பதிவு முடிந்துவிட்டது’ அல்லது ‘ இருப்பு இல்லை’ என்றே பதில் வருவதாக மக்கள் சொல்கிறார்கள்.

image

image

45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசியிலும் ‘கோவாக்சின்’ தடுப்பூசி பற்றாக்குறை நீடிக்கிறது, இதனால் கோவாக்சின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டவர்கள், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட இயலாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அதுபோல ஆந்திரா, பீகார், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் தமிழகத்தை விட கூடுதலாக தடுப்பூசிகளை பெற்றிருப்பதை பிரதமரிடம் சுட்டிக்காட்டி, தேவையான அளவு தடுப்பூசிகளை பெற தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.    

Author: sivapriya