ஜார்க்கண்ட் : செங்கல் சூளையில் தினக்கூலியாக வேலை செய்யும் சர்வதேச கால்பந்தாட்ட வீராங்கனை!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் செங்கல் சூளை ஒன்றில் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார் சர்வதேச கால்பந்தாட்ட களத்தில் இந்திய அணிக்காக விளையாடிய வீராங்கனை சங்கீதா சோரன். தாய்லாந்து மற்றும் பூட்டானில் நடைபெற்ற கால்பந்தாட்ட தொடரில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடியவர் சங்கீதா சோரன். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பன்ஸ்முரி கிராமத்தில் அவர் செங்கல் சூளையில் வேலை செய்வது உறுதியாகி உள்ளது. 

“எனது குடும்பத்தின் நிதி சூழல் நான் செங்கல் சூளையில் வேலை செய்ய காரணம். எனது அப்பாவுக்கு கண் பார்வையில் கோளாறு. அவரால் சரிவர கேட்கவும் முடியாது. எனது மூத்த சகோதரர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். எனது வீட்டு தேவைக்காக நான் வேலை செய்து வருகிறேன்” என்கிறார் அவர். 

ஒரு பக்கம் செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டே தனது விளையாட்டு கனவையும் விடாமல் துரத்தி வருகிறார் சங்கீதா. தினமும் காலையில் இரண்டு மணி நேரம் பயிற்சி செய்து வருகிறார். கடந்த ஆண்டு ஊரடங்கு அமலாவதற்கு முன்னர் இந்திய அணியில் விளையாடுவதற்கான அழைப்பை பெற்றிருந்தார் சங்கீதா. இருப்பினும் கொரோனா பரவலால் டிரையல்ஸுக்கு செல்லாமல் உள்ளார். 

“அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவும், பயிற்சியும் அவசியம். ஆனால் விளிம்பு நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களின் மீது அரசு அக்கறை செலுத்துவதில்லை. அதனால் தான் கூலி தொழிலாளியாக நான் வேலை செய்து வருகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். 

image

அவரது நிலையை அறிந்த ஜார்க்கண்ட் அரசு தகுந்த உதவியை அளிப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளது. இரண்டாவது முறையாக இதை சொல்லி உள்ளது அந்த அரசு என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Facebook Comments Box
Author: sivapriya