எழுவர் விடுதலைக்கு கடும் எதிர்ப்பு… நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி!

கடந்த 1991-இல் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி. இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் அடைபட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், நளினி ஆகிய ஏழு பேரையும் விடுவிக்க வேண்டி தமிழகத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். 

தமிழத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் பொறுப்பேற்ற நாள் முதல் எழுவர் விடுதலை தொடர்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. தொடக்கத்தில் சட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். அதனை தொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் (அதிமுக அரசு) கடந்த 2018-இல் நிறைவேற்றிய தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக் கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் மூலம் சமிபத்தில் வலியுறுத்தி இருந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். 

இந்த கடிதத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சிறைச்சாலையில் கூட்ட நெருக்கடியை நீக்கும் பொருட்டு கைதிகளை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. முதல்வர் எழுதிய கடிதத்தை திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, குடியரசுத் தலைவரிடம் வழங்கியிருந்தார். 

திமுக அரசின் இந்த முன்னெடுப்புக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களின் எதிர்வினை என்ன என்பதை பார்ப்போம்… 

அண்மையில் முடிந்த தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்து தான் தேர்தலை சந்தித்திருந்தன. காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் வென்றுள்ளது. ஆட்சொ அமைத்த சில வாரங்களிலே திமுகவின் இந்த முன்னெடுப்புக்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

image

கே.எஸ்.அழகிரி – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் 

“எழுவர் விடுதலை குறித்து குடியரசு தலைவருக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு துளி அளவரும் உடன்பாடு கிடையாது. குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதை நீதிமன்றங்கள் தான் செய்ய வேண்டுமே தவிர அரசியல் ரீதியிலான அழுத்தம் கொடுக்க கூடாது” என தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தியின் நினைவு நாளன்று அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்திய பிறகு கே.எஸ்.அழகிரி இதனை தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

image

திருநாவுக்கரசர் – திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்

“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலை குறித்து  நீதிமன்றம் மூலமாகவே முடிவு செய்ய வேண்டும் எனவும் இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலமாக பரிகாரம் தேடப்பட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. சட்டமன்றம் கூடும் போது அது குறித்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்பார்கள். இந்த விவகாரத்தில் ஜனாதிபதியோ, ஆளுநரோ முடிவு செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இது தான் காங்கிரஸ் கட்சியின் நேற்றைய இன்றைய நாளைய நிலைப்பாடு” என அவர் தெரிவித்துள்ளார். 

image

நாராயணசாமி – புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் 

“எங்களைப் பொறுத்தவரையில் எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியை கொன்றவர்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம் அது மன்னிக்க முடியாத ஒரு குற்றம்.  அவர்கள் குற்றவாளிகள் கொலையாளிகள் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆகவே அந்த குற்றவாளிகள் தண்டனை அனுபவிக்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதை நான் உறுதியாகக் கூறிக் கொள்கிறேன். சில அரசியல் கட்சி தலைவர்கள் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் இது அவர்களின் சொந்த கருத்து” என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

image

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி என்ன சொல்கிறார்?

என் தந்தையை இழந்தது மிகுந்த வலியை ஏற்படுத்தியது. ஆனால் எனது தந்தையை கொன்றவர்கள் மீது எந்தக் கோபமும் இல்லை. நான் அவர்களை மன்னித்துவிட்டேன்” என புதுச்சேரியில் கடந்த பிப்ரவரி 17 அன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். 

எழுவர் விடுதலை குறித்த இறுதி முடிவை குடியரசுத் தலைவர் எடுக்க வேண்டியுள்ளது என்று ஒரு தரப்பினரும், தமிழக அரசுக்கே அந்த அதிகாரம் உள்ளது என்று மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று அவரது மகனும் ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளியுமான பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோலில் சிறை விடுப்பு கொடுத்துள்ளது தமிழக அரசு. 

Author: sivapriya