“அம்மா ஞாபகமா அவங்க செல்போன் வேணும்”- கொரோனாவுக்கு தாயை பறிகொடுத்த சிறுமியின் வேண்டுகோள்

கர்நாடக மாநிலம் குடகு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மனைவியான பிரபா கடந்த 16ஆம் தேதி அன்று கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அங்குள்ள மடிக்கேரி பகுதியில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த பிரபாவின் 9 வயது மகள் ஹிரித்திக்ஷா ஒரு உருக்கமான வேண்டுகோளை கடிதம் மூலம் கோரியுள்ளார். 

“அம்மா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தாங்க. ஆனா அம்மா வீட்டுக்கு வரவே இல்ல. அம்மாவிடம் பேச 15ஆம் தேதி அவரது செல்போனுக்கு கால் செய்தேன். ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. 16ஆம் தேதியன்று அம்மா எங்களை விட்டு பிரிந்ததாக தகவல் வந்தது. மருத்துவமனையை அணுகி அம்மாவின் செல்போனை கேட்டோம். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் போன் தொலைந்து விட்டதாக சொல்லியிருந்தார்கள். 

அந்த போனில் போட்டோவும், வீடியோவும் உள்ளன. இப்போதைக்கு அம்மா ஞாபகமா எனக்கு அந்த செல்போன் மட்டும் தான் உள்ளது. அதனால அது எனக்கு வேண்டும். யாராவது அந்த போனை எடுத்திருந்தாலோ அல்லது கண்டெடுத்தாலோ என்னிடம் கொடுத்து விடுங்கள்” என அந்த கடிதத்தில் சிறுமி ஹிரித்திக்ஷா தெரிவித்துள்ளார். 

சிறுமி ஹிரித்திக்ஷாவின் கோரிக்கை சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்றது. அதோடு இதை வழக்காக பதிவு செய்து செல்போனை கண்டெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர் கர்நாடக போலீசார்.

Author: sivapriya