சீனாவில் பரிதாபம்; மோசமான வானிலையால் மாரத்தானில் பங்கேற்ற 21 பேர் பலி

பீஜிங்,

சீனாவின் வடமேற்குப் பகுதியில் கன்சு மாகாணத்தில் உள்ள சிறிய நகரம் பெயியான். இங்குள்ள மஞ்சள் நதி ஸ்டோன் வனப்பகுதி அருகே மிகப்பெரிய மலை உள்ளது.

இந்த மலையில் நேற்று முன்தினம் 100 கி.மீ. தொலைவிலான மாரத்தான் போட்டி நடந்தது. இந்த போட்டியில் சீனாவின் பல்வேறு மாகாணங்களில் இருந்து வந்த 172 பேர் கலந்து கொண்டனர்.

போட்டியில் பங்கேற்ற பலர் 21 கி.மீ., தாண்டி சென்றனர். சிலர் 30 கி.மீ., தூரத்தை நெருங்கினர். அப்போது அந்த மலைப்பகுதியில் திடீரென வானிலை மோசமடைந்தது.

உறைபனி விழுந்ததுடன் பலத்த காற்றும் வீசியது. அதோடு ஆலங்கட்டி மழையும் பெய்தது. அது மட்டுமின்றி அங்கு கன மழையும் கொட்டியது.‌ இதில், வீரர்கள் பலர் சிக்கி கொண்டனர்.

இதுகுறித்து போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மாரத்தான் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து மலை பகுதியில் சிக்கிய வீரர்களை மீட்பதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.‌

இதனிடையே நேற்றுமுன்தினம் இரவு அந்த மலைப்பகுதியில் வானிலை மீண்டும் மோசமடைந்ததால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.‌ இதையடுத்து நேற்று அதிகாலை மீண்டும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.

அப்போது மலைப்பகுதியில் போட்டியாளர்கள் 21 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். அதேவேளையில் போட்டியாளர்கள் 151 பேரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். அவர்களில் 8 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்தன. உடனடியாக அவர்கள் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து பெயியான் நகர மேயர் ஜாங் சுசென் கூறுகையில,் ‘‘மதியம் சுமார் 20 முதல் 30 கிலோ மீட்டருக்கு இடையிலான ஓட்டப்பந்தயத்தின் உயரமான பகுதி திடீரென பேரழிவு தரும் வானிலை காரணமாக பாதிக்கப்பட்டது. ஒரு குறுகிய காலத்தில் மலைப் பகுதியில் திடீரென ஆலங்கட்டி மழை மற்றும் கன மழை பெய்தது. மேலும் பலத்த காற்று வீசியது. வெப்பநிலை கடுமையாக குறைந்து‌’’ என கூறினார்.

திடீர் வானிலை மாற்றத்தால் இந்தத் துயர மரணங்கள் நிகழ்ந்தன என்பதை ஜாங் சுசென் உறுதிப்படுத்தினார். அதே சமயம் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Author: sivapriya