அசாமில் பாதுகாப்பு படையினரின் என்கவுண்ட்டரில் – 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தின் மேற்கு கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் ஒரு கோவில் குருக்கள் ஒருவர் கடந்த வாரம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, நாகாலாந்து மாநிலத்தை ஒட்டிய இந்த மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், மேற்கு கர்பி ஆங்லாங் மாவட்டத்தின் மிச்சிபாய்லங் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் சோனோவால் தலைமையில் அசாம் ரைபிள்ஸ் வீரர்களும், போலீசாரும் நேற்று அப்பகுதியில் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் திருப்பிச் சுட்டனர். அதில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் திமாசா தேசிய விடுதலைப் படை என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

முதலில் 6 பேரின் உடல்களும், பின்னர் 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. அந்த இருவரும் குறிப்பிட்ட பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள் என்று கூறப்படுகிறது.

4 ஏ.கே.47 துப்பாக்கிகளும், பல சுற்று வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.

Author: sivapriya