நேபாள நாடாளுமன்ற தேர்தல்: ஒரே கட்டமாக நடத்த அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை

காத்மாண்டு,

நேபாளத்தில் பிரதமர் கேபி சர்மா ஒளி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்டு கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக அங்கு பல மாதங்களாக அரசியல் குழப்பம் நீடித்து வந்த நிலையில், அதிபர் பித்யாதேவி பண்டாரி நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். மேலும் 271 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு வருகிற நவம்பர் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இந்த நிலையில் தேர்தலின்போது கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்க ஒரே கட்டமாக தேர்தலை நடத்த அந்த நாட்டு தேர்தல் ஆணையம் பிரதமர் கே.பி. சர்மா ஒளியை அறிவுறுத்தியுள்ளது.

நேபாள தலைமை தேர்தல் ஆணையர் தினேஷ் குமார் தபாலியா, பிரதமர் கே.பி. சர்மா ஒளியுடனான சந்திப்புக்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தலை வெற்றிகரமாக நடத்துவது தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு கடமையாகும். தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு எங்களுக்கு ஏராளமான நேரம் உள்ளது. எனவே தேர்தலை ஒரே கட்டத்தில் நடத்துமாறு அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம்” என கூறினார்.

Author: sivapriya