தமிழகத்திற்கு குறைவான தடுப்பூசி ஒதுக்கீடு: சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

தமிழகத்திற்கு குறைவான தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆக்சிஜன் ரெம்டெவிசர் ஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. தாமாக முன்வந்து விசாரிக்கும் இந்த வழக்கில், இன்று மத்திய அரசு அளித்த விளக்கத்தில் தடுப்பூசிகளை அதிகமான அளவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் 216 கோடி டோஸ் கிடைக்கும் வகையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

இதனால் நாட்டில் உள்ள அனைவரும் தடுப்பூசியை செலுத்தி முடிப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிமன்றம் “யாஸ் புயலால் தமிழகத்திற்கு வரும் ஆக்சிஜன் அளவை குறையாமல் மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு செய்ய வேண்டும். தமிழ்நாடு, ராஜஸ்தான், போன்ற மாநிலங்களுக்கு தடுப்பூசியை குறைவாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. டெல்லி போன்ற பகுதிகளுக்கு அதிகமாக ஒதுக்கீடு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது.

இது தொடர்பாக மத்திய அரசு மீண்டும் ஆய்வு செய்து ஒதுக்கீட்டை முறைபடுத்த வேண்டும். குறிப்பாக தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய தடுப்பூசியின் அளவை ஒப்பிடும்போது குறைவாக இருப்பதாகவும், இது எங்களுக்கு மனக்குறையை ஏற்படுத்தி இருக்கிறது” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல தடுப்பூசி மீதான நம்பிக்கையை மத்திய மாநில அரசுகள் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya