மதுரை விமானத்தில் நடைபெற்ற திருமணம்: விசாரணைக்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு

கொரோனா ஊரடங்கு நேரத்தில் மதுரையை சேர்ந்த ஜோடி விமானத்தில் திருமணம் செய்துகொண்டது சிக்கலுக்கு வழிவகுத்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகளற்ற ஊரடங்கு தமிழகத்தில் இன்று முதல் அமலில் உள்ளது. நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில் திருமண மண்டபங்களில் மணவிழா நடத்துவதற்கு அரசு அனுமதி மறுத்துள்ளது. இறப்பு நிகழ்ச்சிகளில் கூட உறவினர்கள் பங்கேற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரையை சேர்ந்த இளம் ஜோடிக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானத்தில் நேற்று திருமணம் நடந்தது. கொரோனா காலத்தில் யாரும் மறக்க முடியாத அளவுக்கு தங்களது திருமணம் அமைய வேண்டும் என்ற ஆசையில், அந்த ஜோடி நடுவானில் பறந்தபடி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த செய்தி நாளிதழ் மற்றும் ஊடகங்களில் வெளியானதையடுத்து, கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்போது, விதிகளை மீறி உறவினர்கள் புடைசூழ எப்படி திருமணம் நடத்தலாம் என விமான போக்குவரத்து இயக்குநரகம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. கொரோனா விதிகளை பின்பற்றாதவர்கள் மீது உரிய வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு பதில் அளித்திருக்கும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கொரோனா விதிகளை மீறக்கூடாது என விமானத்தை வாடகை எடுத்தவர்களிடம் அறிவுறுத்தியதாகவும், மீறினால் பயண அனுமதி ரத்து செய்யப்படும் என தெளிவாக விளக்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளது. நடுவானில் திருமணத்தை நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தது பற்றி தங்களுக்கு முன்கூட்டியே தெரியாது என மதுரை விமான நிலைய அதிகாரிகளும் கூறியுள்ளனர்.

திருமண மண்டபங்கள் கிடைக்காமல், மூடிய கோயில்களுக்கு முன்னர் பல ஜோடிகளின் திருமணங்கள் மிக எளிமையாக நடக்கும் சூழலில், கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்டு பறக்கும் விமானத்தில் நடுவானில் நடந்த திருமணத்தால் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya