சிறு – குறு விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் இலவச டிராக்டர் வாடகை திட்டம்: TAFE நிறுவனம்

கொரோனா பெருந்தொற்றின் இந்த இரண்டாவது அலை காலகட்டத்தில் தமிழகத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச டிராக்டர் வாடகை திட்டத்தை அறிவித்துள்ளது TAFE நிறுவனம். இந்நிறுவனம் உலகின் மூன்றாவது மிகப்பெரிய டிராக்டர் தயாரிப்பு நிறுவனமாகும். தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 15 கோடி ரூபாய் வரையில் பங்களிப்பு அளித்துள்ளது TAFE நிறுவனம். 

இந்த இலவச டிராக்டர் திட்டத்தின் மூலம் சுமார் ஐம்பதாயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 மே முதல் 2021 ஜூலை வரையில் இந்த இலவச டிராக்டர் வாடகை திட்டம் பயன்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக TAFE நிறுவனம் 16500 மேஸி ஃபெர்குசன் மற்றும் ஐஷர் டிராக்டர்கள், 26800 வேளாண் சாதனங்களை வழங்க உள்ளது. 

image

யார் யார் பயன்பெறலாம்?

2 ஏக்கர் அல்லது 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் சிறிய விவசாயிகளின் நலனுக்காக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

எப்படி வாடகைக்கு பெறுவது?

தமிழக அரசின் உழவன் மொபைல் அப்ளிகேஷனில் உள்ள ஜேஃபார்ம் சர்வீஸசின் டிஜிட்டல் செயல்தளத்தின் வழியாகவோ அல்லது கட்டணமில்லா இலவச TOLL FREE எண்ணான 1800-4200-100 மூலமாகவும் விவசாயிகள் இந்த இலவச வாடகை எடுத்துக் கொள்ளலாம். தமிழக அரசின் வேளாண் துறை மற்றும் அத்துறையின் அதிகாரிகளின் ஆதரவோடு இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. 

“தமிழக அரசின் ஊக்குவிப்பு மற்றும் ஆதரவுடன் இந்த இலவச டிராக்டர் வாடகை திட்டத்தை அளிப்பதில் TAFE மகிழ்ச்சி அடைகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இந்த இக்கட்டான சூழலில் மிகவும் உதவிகரமாக இருக்கும். விவசாயிகளின் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தமிழக முதல்வர் மற்றும் வேளாண் துறை அமைச்சருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என TAFE நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மல்லிகா சீனிவாசன் தெரிவித்துள்ளார்.   

Author: sivapriya