சர்வதேச காணாமல் போன குழந்தைகள் நாள்

இந்நாள், காணாமற்போன குழந்தைகளுக்கான சர்வதேச நாளென ஒவ்வொரு ஆண்டும் மே 25-ம் நாள் கொண்டாடப்படுகிறது. காணாமல் போகும் எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு அரசு மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.

1979-ம் ஆண்டு மே 25-ம் நாள் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இட்டன் பாட்ஷ் என்ற 6 வயது குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் காணாமல் போய்விட, ஒரு ஒளிப்படக் கலைஞராக இருந்த அவனது தந்தை, தன்னுடைய குழந்தையின் (இட்டன் பாட்ஷ்) ஒளிப்படத்தை வெளியிட்டுக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது தீவிர தேடுதல் வேட்டையை அங்கிருந்த ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. ஊடக நிறுவனங்களின் இந்த நடவடிக்கையால் 1979-ம் ஆண்டில் இருந்து 1981-ம் ஆண்டு வரையில் குளம், ஆறு போன்ற இடங்களில் சுவடு தெரியாமல் காணாமல் போன 29 குழந்தைகளின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இதனையொட்டி 1983-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ரானல்ட் ரேகன் மே 25-ம் திகதியை காணாமல் போகும் குழந்தைகளுக்கான தேசிய நாளாக அறிவித்தார். அன்றிலிருந்து மே 25-ம் நாள் காணாமல் போகும் குழந்தைகள் நாளாக ஐக்கிய அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டுவருகிறது.