“கோலி என்னை சீண்டியபோது சந்தோஷப்பட்டேன்”-மனம் திறந்த சூர்யகுமார் யாதவ்

2020 ஐபிஎல் தொடரில் கோலி என்னை சீண்டியபோது சந்தோஷப்பட்டேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அப்போது ஒரு போட்டியில் மும்பை – பெங்களூரு அணிகள் மோதின. அந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் பெங்களூரு பந்துவீச்சை சிதறடித்துக்கொண்டு இருந்தார். இதனால் கோபமடைந்த கோலி, சூர்யகுமார் யாதவை சீண்டும் விதமாக பேசினார். அப்போது கோலியை, சூர்யகுமார் யாதவ் முறைத்துக்கொண்டே இருந்தார். அந்தப் புகைப்படங்கள் அப்போது வைரல் ஆகின.

image

இது குறித்து இப்போது பேசியுள்ள சூர்யகுமார் யாதவ் “நான் என்று இல்லை. எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் கோலி அப்படித்தான் செய்திருப்பார். அந்தளவுக்கு கோலி ஆக்ரோஷமானவர். ஆனால் கோலி என்னை சீண்டியதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஏனென்றால் என்னுடைய விக்கெட் அப்போது பெங்களூருக்கு முக்கியமானதாக இருந்தது. அதனால்தான் என்னை சீண்டி விரைவாக அவுட்டாக்க முயற்சி செய்தார் கோலி” என்றார்.

மேலும் “நான் எப்போதும் என் உணர்ச்சிகளை வெளிக்காட்டமாட்டேன். ஆனால் அன்றையப் போட்டியில் நானும் கோபமடைந்தேன். ஆனால் போட்டிக்கு பின்பு கோலி என்னை சிறப்பாக விளையாடியதாகப் பாராட்டினார். ஆட்டத்தின்போது சீண்டிய சம்பவம் குறித்து பேசும்போது, இதெல்லாம் சகஜம்தான் எனக் கூறி உற்சாகமாகப் பேசினார்” என்றார் சூர்யகுமார் யாதவ்.

Author: sivapriya