கொரோனாவால் இறந்தவர் உடலை தெரு வழியாக மயானம் கொண்டு செல்ல எதிர்ப்பு

ஜெயங்கொண்டம்:

போராட்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகர் பகுதியை சேர்ந்த 54 வயது பெண் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.

அவரது உடலை ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பிச்சனேரி அருகே உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மயானம் உள்ள பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளதால், மாற்றுப்பாதையான ஜூப்ளி ரோடு தெரு வழியாக, அந்த பெண்ணின் உடலை கொண்டு சென்றனர். அதற்கு அப்பகுதி பொதுமக்கள், தங்கள் தெரு வழியாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லக்கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையை சீரமைக்க வேண்டும்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அப்பகுதி மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அந்த வழியாக உடலை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தெரு மக்கள் கூறுகையில், காலம் காலமாக பிச்சனேரி வழியாகத்தான், இறந்தவர்கள் உடலை மயானத்திற்கு கொண்டு செல்வது வழக்கம். தற்போது ஜூப்ளிரோடு தெரு வழியாக வந்து செல்கின்றனர். பிச்சனேரி ரோடு சரியில்லை என்பதால், சாதாரணமாக இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல நாங்கள் தடை விதித்ததில்லை. ஆனால் கொரோனாவால் இறந்தவர் உடலை, தெரு உள்ள பகுதிகளில் கொண்டு சென்றால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இப்பகுதியில் ஏராளமான குழந்தைகள் உள்ளனர். அவர்கள் தெருவில் விளையாடுகின்றனர். அவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் ஆபத்தாகிவிடும். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனியும் தாமதிக்காமல், நகராட்சி நிர்வாகம் பிச்சனேரி வழியாக இறந்தவர் உடல்களை கொண்டு செல்ல சாலையை சீரமைத்து தர வேண்டும். இந்தப் பகுதிக்கு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என்று, ஜூப்ளி ரோடு தெரு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Author: sivapriya