தமிழகத்தில் 18+ வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் இளைஞர்கள் ஆர்வம்!

தமிழகம் முழுவதும் 18 முதல் 44 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமில் இளைஞர்கள் பலரும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாமில் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தடுப்பூசி போடப்பட்டது.

மதுரையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் 18+ வயதினருக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக மாநகராட்சியில் பணிபுரியும் 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் 18 வயதில் இருந்து 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பலரும் ஆர்வமாக வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முன்பதிவு செய்யாதவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

image

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். வேதாரண்யம் சாலையில் உள்ள அரசு பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்18 முதல் 44 வயது வரையிலான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டது. பெரும்பாலான மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தக்கலை அரசு மருத்துவமனை, குழித்துறை அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு தடுப்பூசி போடாமல் தமிழகத்தில் உள்ள நபர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டது.

மேட்டூரில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக யாருக்கும் தடுப்பூசி போடவில்லை. இன்று 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று வெளியான செய்தியை தவறாக புரிந்து கொண்ட பலரும் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களிடம் தடுப்பூசி கையிருப்பு இல்லை என்று அதிகாரிகள் கூறியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Facebook Comments Box
Author: sivapriya