தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தவில்லை: ‘ தி ஃபேமிலி மேன் 2’ குழு விளக்கம்!

 ‘தி ஃபேமிலி மேன் 2’ இணையத் தொடரை தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை பல தரப்புகளில் இருந்தும் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழர்களையும் அவர்களின் உணர்வுகளையும் தாங்கள் எந்தவகையிலும் கொச்சைப்படுத்தவில்லை என அந்த தொடரின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 2019-ல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘தி ஃபேமிலி மேன்’ தொடரின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியிருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி ஆகியோரோடு இரண்டாம் பாகத்தில் சமந்தாவும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அமேசான் பிரைம் தளத்தில் ஜூன் 4-ம் தேதி ‘தி ஃபேமிலி மேன் 2’ வெளியாகவுள்ள நிலையில், அதன் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் தீவிரவாத தாக்குதலை நாயகன் ஸ்ரீகாந்த் திவாரி முறியடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டிரைலரில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் அங்குள்ள கலகக் குழுக்களுக்கும் தொடர்பு இருக்கிறது என தமிழ் போராளிக் குழுக்களை தொடர்புபடுத்திய வசனம் இடம்பெற்றுள்ளது.

 அதோடு, இலங்கை வரைபடமும், போராளிகள் பயிற்சி பெறும் காட்சியும் டிரைலரில் இடம்பெற்றிருக்கின்றன. இதனால், தமிழ் ஈழ போராளிகளை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

image

 ‘தி ஃபேமிலி மேன் 2’ இணையத் தொடரை வெளியிடக்கூடாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். சமத்துவம், நீதிக்காக போராடி வரும் ஈழத் தமிழ் போராளிகளை தீவிரவாதிகளாக சித்தரிப்பது அவசியமற்றது எனக் குறிப்பிட்டு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மத்திய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார். மேலும், இணையத்தொடரை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார்.

 இந்நிலையில், ‘தி ஃபேமிலி மேன் 2’ டிரைலரில் இடம்பெற்றுள்ள ஒன்றிரண்டு காட்சிகளை வைத்து தமிழர்களை கொச்சைப்படுத்தியதாக முடிவு செய்யக்கூடாது என்றும், எழுத்தாளர்கள் குழுவில் பெரும்பாலானோர் தமிழர்கள்தான் எனவும் குறிப்பிட்டு தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே அறிக்கை விடுத்துள்ளனர்.

 தாங்கள் தமிழர்களின் உணர்வுகளுக்கும் கலாசாரத்துக்கும் மதிப்பளிப்பதாகவும், தொடர் வெளியாகும் வரை காத்திருந்தால் எதிர்த்தவர்கள் அனைவரும் பாராட்டுவீர்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Author: sivapriya