கொலை வழக்கு: ரயில்வே பணியிலிருந்து சுஷில் குமார் இடைநீக்கம்!

கொலைக் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார் ரயில்வே துறை பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் சக வீரரான ராணா தன்கட்டுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தன்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர்.

மோசமான காயங்களுடன் கிடந்த சாகர் தன்கட்டை, அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால், சிகிச்சைப் பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த சுஷில் குமாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக 2 பதக்கங்களை வென்றவர் சுஷில் குமார்.

இந்த கொலை வழக்கு தொடர்பான அறிக்கையை ரயில்வே வாரியம் டெல்லி அரசிடமிருந்து ஞாயிற்றுக்கிழமை பெற்றது. அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், அவர் இடைநீக்கம் செய்யப்படுவார்” என்று வடக்கு ரயில்வே சிபிஆர்ஓ தீபக் குமார் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் ரயில்வே பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Author: sivapriya