ஒடிசா தொழிலாளர்களின் படகு ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

முழுமுடக்கத்தால் படகு மூலமாக சொந்த ஊர் செல்ல முயன்ற ஒடிசா மாநிலத்தினர் 3 பேர் ஆற்றில்  மூழ்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிசாவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 8 பேர், தெலங்கானா மாநிலத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த அவர்கள், சொந்த ஊருக்கு புறப்பட முடிவு செய்தனர். காவல்துறையினரின் கண்காணிப்பால் சாலை மார்க்கமாக பயணிக்க முடியாது என்பதால், சில்லேரு நதி வழியாக நாட்டுப் படகில் இரவில் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இரு படகுகளில் சென்றபோது முன்னே சென்ற படகு எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கியுள்ளது. பின்னால் சென்ற படகில் இருந்தவர்கள் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்க முயன்றபோது, பாரம் தாங்காமல் அதுவும் மூழ்கியுள்ளது. மாநில பேரிடர் மீட்புக்குழுவும், தீயணைப்புத்துறையினரும் மீட்பு பணியில் களமிறங்கி ஒரு குழந்தை உட்பட 3 பேரின் உடல்களை மீட்டனர். மற்றவர்களின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

Facebook Comments Box
Author: sivapriya