காங்கோ நாட்டில் எரிமலையின் கோரதாண்டவம்: வீடுகளை இழந்து மக்கள் தவிப்பு

காங்கோ நாட்டில் எரிமலை வெடித்ததில் நெருப்புக் குழம்பில் சிக்கி பலரும் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகள் மற்றும் உறவுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

காங்கோ நாட்டில் சுமார் 20ஆண்டுகளாக அமைதியாக இருந்த எரிமலை, தற்போது வெடித்துச் சிதறியதில் நிலைகுலைந்துள்ளது கோமா நகரம். கிழக்கு காங்கோ பகுதியிலுள்ள நியிராகோங்கோ எரிமலை யாரும் எதிர்பாராத விதமாக இரு தினங்களுக்கு முன்னர் திடீரென வெடித்துச் சிதறியது. அருகே உள்ள 17 கிராமங்களுக்குள் நெருப்புக் குழம்பையும், புகையையும் கக்கியது. எரிமலை வெடிப்பு குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படாததால், அப்பகுதி மக்கள் எரிமலைக் குழம்பு வீடுகளை சூழ்வதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

image

திடீரென குடியிருப்பு முழுவதும் புகை பரவியதால், அங்கிருந்தவர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதில் கார்களில் தப்பிக்க முயன்ற சிலர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் சிலர் புகை மூட்டத்தில் சிக்கியும், எரிமலைக்குழம்பில் சிக்கியும் உயிரிழந்தனர். எரிமலை வெடித்துச் சிதறியதால் 30க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சுகின்றனர் கோமா நகரவாசிகள்.

எரிமலை வெடிப்பை அடுத்து நிலநடுக்கமும் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் தொடர்ந்து அச்சத்தில் உறைந்துள்ளனர். 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோமா நகரிலிருந்து வெளியேறியுள்ளனர். சிலர் அண்டை நாடான ருவாண்டாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். எரிமலையில் தொடர்ந்து லாவா வெளியேறி வருவதால், மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது ராணுவம். கோமா விமான தளத்துக்கு அருகே இந்திய ராணுவமும் தற்போது அவர்களுடன் கைகோர்த்திருக்கிறது. எரிமலை வெடிப்பால் ஒருபுறம் வீடுகளை இழந்தவர்கள், மறுபுறம் கண்ணீருடன் தங்களது உறவுகளை தேடி அலையும் காட்சிகள் காண்போரின் கண்களை குளமாக்குகின்றன.

image

ஏராளமான குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். இதற்கிடையே எரிமலை வெடிப்பிற்குப் பிறகு 170க்கும் மேற்பட்ட குழந்தைகளை காணவில்லை என யுனிசெஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2002ஆம் ஆண்டு இந்த எரிமலை வெடித்து லாவா வெளியேறியதில் கோமா நகரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஒரு லட்சம் பேர் வீடற்றவர்களாக நின்றனர். தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளதால், மக்களின் உயிர்களைக் காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் பணியில் காங்கோ அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

Author: sivapriya