பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் வாழ்நாள் இறுதிவரை சிறையில் இருப்பதை உறுதி செய்யுமாறு பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு அண்மையில் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு எதிராக பாரதிய ஜனதாவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி குடியரசுத் தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் பரிந்துரையை நிராகரிக்குமாறு சுப்பிரமணியன் சுவாமி கோரியுள்ளார்.

image

இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பிய அமைதிப் படையின் ஆயிரக்கணக்கான வீரர்களை விடுதலைப் புலிகள் இயக்கம் கொலை செய்ததாகவும், அந்த இயக்கத்தினர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்ததாகவும் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார். படுகொலையில் தொடர்புடைய பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை எக்காரணம் கொண்டும் விடுதலை செய்யக் கூடாது என்றும், 7 பேரும் தங்கள் வாழ்நாள் இறுதிவரை சிறையிலேயே இருப்பதை குடியரசுத் தலைவர் உறுதி செய்யுமாறும் கடிதத்தில் அவர் கூறியுள்ளார். 7 பேர் விடுதலை குறித்து மத்திய – மாநில அரசுகள் எதிர்காலத்தில் பரிந்துரை அனுப்பினாலும் ஏற்கக் கூடாது எனவும் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

Facebook Comments Box
Author: sivapriya