கிராம மக்களை காப்பாற்ற தினமும் 6 வகை சூப், முட்டை, சுண்டல் வழங்கும் வாட்ஸ் அப் இளைஞர் குழு

கொரோனா தொற்றிலிருந்து கிராம மக்களை காக்க இளைஞர்கள் வாட்ஸ் அப் குழு ஒன்று தினமும் விதவிதமான சூப் வகைகள் மற்றும்முட்டைகளை வழங்கி வருகிறது. 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கானூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு
‘உண்மை, உழைப்பு, உயர்வு’ என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு ஒன்றை ஆரம்பித்து ஊர் பிரச்னைகளை கிராம மக்களுக்கு தொடர்ந்து
தெரியப்படுத்தி வந்தனர். 

அதனைத்தொடர்ந்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கிராமத்தில் இருந்து வெளிநாடு சென்றவர்கள் என பலரும் நிதியளிக்க முன்வந்த நிலையில், தொடர்ந்து ஊருக்கு தேவையான நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர்.  தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதிலிருந்து ஊர் மக்களை காப்பாற்ற நினைத்த இவர்கள் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து மக்களுக்கு சொனா வனா தேநீர், கபசுரகுடிநீர், முட்டை, சுண்டல், ஆறு வகையான சூப் வகைகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர்.

image

அந்த குழுவைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரை தொடர்பு கொண்டு பேசினோம், “ ‘உண்மை உழைப்பு உயர்வு’ வாட்ஸ் அப் குழு மூலமா 8 ஆண்டுகளாக கிராம மக்களுக்கு பல உதவிகள செஞ்சிட்டு வர்றோம். கிரமத்துல மணல் திருட்டு அதிகமானதால செழிப்பா
இருந்த பூமியில தண்ணீ வரமா போயிருச்சு. அதனால மக்கள் தினமும் கிலோமீட்டர் கணக்குல நடந்தே போயி தண்ணீ புடிக்க
வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுச்சு.

image

அப்பதான் நாங்க எல்லோரும் சேர்ந்து ஊருக்கு ஒரு டேங்க் வாங்கி, தினமும் போயி  அதுல தண்ணீ புடிச்சுட்டு வந்து மக்களுக்கு
கொடுத்தோம். அதைத் தொடர்ந்து பல நல்ல விஷயங்கள் பண்ணோம். மக்களுக்கும் எங்க மேல நம்பிக்கை வந்ததால தொடர்ந்து
நிதியுதவி அளிக்க முன்வந்தாங்க. கொரோனா 1 வது அலை வந்தப்ப, விளைவித்த பொருட்களை விற்கமுடியாம இருந்த விவசாயிங்ககிட்ட மலிவு விலையில பொருட்கள வாங்கி மக்களுக்கு இலவசமா கொடுத்தோம். கபசுர குடிநீரையும் மக்கள்ட்ட கொண்டு போயி சேர்த்தோம்.

கொரோனா 2 வது அலை தொடங்கினப்ப மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீரோட சேர்த்து சத்துள்ள உணவுகளை வழங்க திட்டமிட்டோம். அதற்கான பொருட்களையும் முன்னரே வாங்கி வைச்சுருந்தோம். அதன்படி கடந்த 15 நாட்களாக தினமும் மக்களுக்கு முருங்கக்கீரை சூப், வெஜிடபுள் சூப், வாழைத்தண்டு சூப், காளான் சூப், தூதுவளை சூப், முடக்கத்தான் சூப், நிலகடலை, சுண்டல், முட்டை அப்படினு சத்தானவற்றை இலவசமா கொடுக்குறோம்.

image

image

image

இதுக்காக காலையில 3 மணிக்கே எழுந்து உணவு பொருட்களை தயார், 7 மணிக்கெல்லாம் ரெடிபண்ணி மக்கள் முன்னாடி கொண்டு வெச்சுருவோம். இதனால தினமும் 200க்கும் மேற்பட்ட மக்கள் இதனால பயன்பெறுறாங்க. ஆரம்பத்தில கூட்டம் அதிகமானதால சமூக இடைவெளி கடைப்பிடிப்பது பாதிக்கப்பட்டுச்சு. அதுக்குஅப்புறம் வட்டம் போட்டு மக்கள அதில நிக்கவைச்சோம். முககவசம் அணிஞ்சுட்டு வரவங்களுக்கு மட்டும்தான் உணவு பொருட்கள கொடுக்க ஆரம்பிச்சோம். இப்ப  எல்லாம் சரியா போயிட்டு இருக்கு. இதுவரைக்கு எங்க கிராமத்துல யாரும் கொரோனா தொற்றால பாதிக்கப்படல”  என்றார்.

Facebook Comments Box
Author: sivapriya