இந்திய அரசுக்கு எதிராக ‘வாட்ஸ்அப் நிறுவனம்’ வழக்கு; மத்திய அரசு விளக்கம்

இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தகவல் தொழில்நுட்ப  விதிகளை கொண்டு வந்தது. இதற்கு சமூக ஊடகங்கள் இணங்கி நடக்க ஒப்புதல் அளிக்க மே 25-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. இதற்கு கூகுள், ஃபேஸ்புக் சமூக வலைத்தளங்கள் சம்மதம் தெரிவித்து, தங்கள் சேவையைத் தொடர்கின்றன. ஆனால் வாட்ஸ்அப் நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் மத்திய அரசின் சட்டவிதிகள், பயனர்களின் தனி உரிமையை பாதிக்கும் என்று கருதுகிறது. எனவே மத்திய அரசின் இந்த சட்ட விதிகளுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நேற்று ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டது. அதில், ”வழிகாட்டுதல்களுக்கு எதிராக வாட்ஸ்அப் கடைசி நேரத்தில் வழக்கு தொடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பதற்கான முயற்சி ஆகும். தனி உரிமையை அரசு அடிப்படை உரிமை என்று அங்கீகரிக்கிறது. அதை தனது குடிமக்களுக்கு உறுதிப்படுத்துவதில் உறுதியாகவும் உள்ளது.

இந்திய அரசு அனைத்து குடிமக்களுக்கும் தனி உரிமையை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது. ஆனால், அதே நேரத்தில் சட்டம், ஒழுங்கையும், தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்யும் பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: sivapriya