மதுரை: கிராமங்களில் அதிகமாக பரவும் கொரோனா; கட்டுப்படுத்த 140 மினி கோவிட் சென்டர்கள்

மதுரை மாவட்டத்தில் கிராம புறங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த 3 ஆயிரம் பேர் காய்ச்சல் கண்டறியும் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு கட்டுக்குள் இருந்து வருகிறது. நாள்தோறும் சராசரியாக 1200 முதல் 1500 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 3 வாரமாகவே இதே நிலை நீடிக்கிறது. 2-ம் அலையில் இதுவரை 38,714 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 1538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

image

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கிராமபுறங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில், நாள்தோறும் பாதிப்பு அளவில் கிராம புறங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 30 சதவீதமாக இருந்து வந்த நிலையில் தற்போது 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து கிராமங்களிலும் வீடு வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், 3000 களப்பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 15 பேர் முதல் 20 பேர் கொண்ட குழுக்கள் அமைத்து பரிசோதனை செய்யபட்டு வருகிறது.

image

இதையடுத்து வீட்டில் உள்ளவர்களை கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா பாதிக்கப்பட்ட 140 கிராமங்களில் மினி கோவிட் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க 4 கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 271 இடங்கள் கட்டுப்படுத்தபட்ட பகுதிகள் உள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya