ஸ்ரீபெரும்புதூர் ஆக்சிஜன் தயாரிப்பு தொழிற்சாலையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தற்போது உள்ள சூழலில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நாளுக்கு நாள் ஆக்சிஜன் தேவையானது அதிகரித்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் இயங்கி வரும் ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலையான ஐநாக்ஸ் ஆக்சிஜன் தயாரிப்பு தொழிற்சாலையில் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு வாகனங்கள் மூலம் பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.

இந்த தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு 145 மெட்ரிக் டன் ஆக இருந்த ஆக்சிஜன் உற்பத்தி அண்மையில் 195 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டு தொடர்ந்து தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அளிக்கப்பட்டு வருகிறது.

மு.க.ஸ்டாலின் ஆய்வு

இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்த ஐநாக்ஸ் ஆக்சிஜன் தயாரிப்பு தொழிற்சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தொழிற்சாலை நிர்வாகத்தினரிடம் அங்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜன் அளவு குறித்தும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், தொழிற்சாலைக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. டி.ஆர்.பாலு, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Author: sivapriya