இன்ஃபோசிஸ் சி.இ.ஒ சலீல் பரேக் சம்பளம் 44% அதிகரித்து ரூ.49 கோடி ஆக உயர்வு!

இன்ஃபோசிஸ் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக்கின் சம்பளம் கடந்த நிதி ஆண்டில் 44 சதவீதம் உயர்ந்து, ரூ.49 கோடியாக இருக்கிறது. நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு இவரது சம்பளம் ரூ.34 கோடியாக இருந்தது.

கடந்த நிதி ஆண்டில் இவரது சம்பளம் உயர்ந்ததற்கு காரணம் இவர் வசம் உள்ள இன்ஃபோசிஸ் பங்குகளை இவர் விற்றிருந்தது. 2020-ம் நிதி ஆண்டில் 17 கோடி ரூபாய்க்கு மட்டுமே பங்குகளை விற்பனை செய்திருந்தார். ஆனால், கடந்த நிதி ஆண்டில் (2021) 31 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றிருப்பதால் சம்பளம் உயர்ந்திருக்கிறது.

image

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சராசரி பணியாளர்களின் சம்பளம் 7.2 லட்ச ரூபாயாக இருக்கிறது. இந்த நிலையில், பணியாளர்களின் சராசரி சம்பளத்துக்கும் தலைமைச் செயல் அதிகாரியின் சம்பளத்துக்கும் உள்ள விகிதம் 689:1 ஆக இருக்கிறது.

தலைமைச் செயல்பாட்டு அதிகாரி யு.பி பிரவீண் ராவின் சம்பளம் ரூ.10 கோடியில் இருந்து ரூ.17 கோடியாக உயர்ந்திருக்கிறது.

கடந்த வாரம் டிசிஎஸ் நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கை வெளியாது. அதில் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதனின் சம்பளம் ரூ.13.3 கோடியில் இருந்து (2019-20 நிதி ஆண்டு) ரூ.20.36 கோடியாக (2020-21) உயர்ந்திருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி என்.கணபதியின் கடந்த நிதி ஆண்டு சம்பளம் ரூ.16.1 கோடியாக இருந்தது.

Author: sivapriya