பாக். தாக்கினால், மாநிலங்களை சுயமாக ஆயுதம் வாங்க சொல்வார்களா? – கெஜ்ரிவால் காட்டம்

“பாகிஸ்தான், இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சுயமாக ஆயுதம் வாங்கிக் கொள்ள வேண்டுமென மத்திய அரசு சொல்லிவிடுமா?” என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

கொரோனா தடுப்பூசியை, அதை தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்தே மாநில அரசுகள் சுயமாக கொள்முதல் செய்துகொள்ளுமாறு சில வாரங்களுக்கு முன் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. ஆனால், தடுப்பூசி விற்பனைகளை இந்தியாவில் மத்திய அரசுடன் மட்டுமே செய்வோம் என பல நிறுவனங்கள் தெரிவித்துவிட்டன.

imageimage

இது தொடர்பாக பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “தடுப்பூசிகளுக்காக பைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்களுடன் நாங்கள் பேசினோம், அந்த இரு நிறுவனங்களும் எங்களுக்கு நேரடியாக தடுப்பூசிகளை விற்க மறுத்துவிட்டன. அவர்கள் இந்திய அரசுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்குவோம் என்று கூறியுள்ளனர். எனவே தடுப்பூசிகளை இறக்குமதி செய்து மாநிலங்களுக்கு விநியோகிக்குமாறு மத்திய அரசிடம் முறையிட்டுள்ளோம்” என கூறியிருந்தார்.

மேலும் பேசியிருக்கும் அவர், “கொரோனா தடுப்பூசிக்கான கொள்முதலை தனித்தனி மாநிலங்களுக்கு அரசு விடக்கூடாது. ஒருவேளை இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சுயமாக ஆயுதம் வாங்கி தங்களைத்தாங்களே காத்துக்கொள்ள வேண்டுமென மத்திய அரசு சொல்லிவிடுமா? அதன்படி உ.பி., தனக்கான ராணுவ டேங்குகளை தாங்களாக வாங்கிக்கொள்ள வேண்டுமா? இல்லை டெல்லி அரசு துப்பாக்கிகளை இறக்குமதி செய்துக்கொள்ள வேண்டுமா?” எனக் காட்டமாக மத்திய அரசிடம் கேட்டிருந்தார்.

Author: sivapriya