விரைவுச் செய்திகள்: ஆக்சிஜன் ஒதுக்கீடு | குத்தகைக்கு தடுப்பூசி உற்பத்தி மையம்| யாஸ் புயல்

தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீடு 650 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

குறைகிறது கொரோனாவின் தாக்கம்: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் விகிதம் கணிசமாக குறைந்து வருகிறது. 24 மாநிலங்களில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

தடுப்பூசி போட திரண்ட இளைஞர்கள்: சேலம், மதுரையில் தடுப்பூசி போட ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் திரண்டனர். அங்கு தனிமனித இடைவெளி பின்பற்றப்படாததால் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி போடுவது அதிகரிப்பு: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவது அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 2 லட்சத்து 64 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

தடுப்பூசி தயாரிப்பு மையத்தை குத்தகைக்கு தாருங்கள்: செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்தை தமிழகத்திற்கு , மத்திய அரசு குத்தகைக்கு விட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தடுப்பூசி மையம் – ஒரு வாரத்தில் முடிவு: செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த பின்னர் டி. ஆர். பாலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஃபைசர் தடுப்பூசி குறித்து பரிசீலனை: இந்தியாவில் ஃபைசர் தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

கருப்பு பூஞ்சை – ஆம்போடெரிசின் மருந்து ரூ.1200: கருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின் மருந்தின் விலை 1,200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்தா நிறுவனம் தயாரிக்கும் மருந்து திங்கள்கிழமை முதல் விற்பனைக்கு வருகிறது.

மேற்கு வங்கம் செல்கிறார் மோடி: யாஸ் புயல் பாதிப்புகளை பிரதமர் மோடி நாளை ஆய்வு செய்கிறார். ஒடிசா, மேற்குவங்கத்தில் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிடுகிறார்.

குடியிருப்புப் பகுதிகள், சாலைகள் நீரில் மூழ்கின: கன்னியாகுமரியில் மூன்றாவது நாளாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிப்பதுடன், சாலைகளும் நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

திற்பரப்பு அருவியை மூழ்கடித்த வெள்ளம்: தொடர் மழையால் திற்பரப்பு நீர்வீழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கோதையாறு, தாமிரபரணியிலும் வெள்ளநீர் பாய்ந்தோடுகிறது.

பருப்பு டெண்டருக்கு தடை – அரசு மேல்முறையீடு: பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டருக்கு உயர்நீதிமன்ற கிளை தடைவிதித்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மனுவாக தாக்கல் செய்தபிறகு விசாரணை நடத்துவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பேச்சு சுதந்திரத்திற்கு அபாயம் – ட்விட்டர்: இந்தியாவில் தங்கள் சேவையை பயன்படுத்தும் மக்களின் பேச்சு சுதந்திரத்திற்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக ட்விட்டர் கவலை தெரிவித்துள்ளது. காங்கிரஸ் ’டூல்கிட்’ விவகாரத்தில் ட்விட்டர் நிறுவன அலுவலகத்திற்கு சென்று டெல்லி காவல்துறையினர் நோட்டீஸ் அளித்திருந்த நிலையில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Author: sivapriya