2020-21 நிதியாண்டிலும் 2,000 ரூபாய் தாள்கள் புதிதாக அச்சடிக்கவில்லை – ரிசர்வ் வங்கி தகவல்

முந்தைய நிதி ஆண்டைப் போலவே, 2020-21 நிதியாண்டிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2020-21-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையை ரிசர்வ் வங்கி நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டது. அந்த அறிக்கையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலால், மக்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை முன்னெச்சரிக்கையாக பாதுகாத்து வைத்தனர். இதனால், சராசரியைக் காட்டிலும் கடந்த ஆண்டு (2020-21) பணப்புழக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக, 2020 மார்ச் 31 நிலவரப்படி, ரூ.500, ரூ.2,000 நோட்டுகளில் 83.4% புழக்கத்தில் இருந்தது. இது, 2021 மார்ச்சில் 85.7 சதவீதமாக அதிகரித்தது. முந்தைய நிதி ஆண்டைப் போலவே, 2020-21 நிதியாண்டிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மதிப்பு அடிப்படையில் கடந்த 2020 மார்ச் மாதம் 5.48 லட்சம் கோடியாக இருந்த 2,000 நோட்டு புழக்கம், மார்ச் 2021ம் ஆண்டில் 4.9 லட்சம் கோடியாக சரிந்து விட்டது. 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு வருவது எந்தக் காரணத்துக்காக என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. 500 நோட்டு புழக்கம் 31.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2020 மார்ச்சில் 25.4 சதவீதமாகவும், 2018-19 நிதியாண்டில் 19.8 சதவீதமாகவும் இருந்தது. புழக்கத்தில் உள்ள 500 நோட்டு எண்ணிக்கை 3,867.9 கோடி. மதிப்பு அடிப்படையில், இது 19.34 லட்சம் கோடியாக உள்ளது.

20 ரூபாய் தாள்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2019-20 நிதியாண்டில் 13,390 லட்சம் தாள்கள் புழக்கத்தில் இருந்த நிலையில், தற்போது 38,250 லட்சம் தாள்களாக அதிகரித்துள்ளது. 

image

2021 மார்ச் மாத நிலவரப்படி, நாட்டில் ஒட்டுமொத்தமாக பணப்புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 17.3 சதவீதம் 2,000 ரூபாய் நோட்டுகள் ஆகும். இது 2020ல் 22.6 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்திய பொருளாதாரத்தில் கொரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட அளவுக்கு இரண்டாவது அலையின்போது பாதிப்பு ஏற்படவில்லை என்றும் இருப்பினும் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

Author: sivapriya