“வெவ்வேறு டோஸ் தடுப்பூசி எடுத்தவர்கள் கவலைப்பட தேவையில்லை”-அரசு ஆலோசகர்

முதல் டோஸாக கோவிஷீல்டும்,  இரண்டாவது டோஸாக கோவாக்சின் என்பதுபோல வெவ்வேறு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள்கூட கவலைப்பட தேவையில்லை என்கிறார் இந்திய அரசின் தலைமை கோவிட் 19  ஆலோசகர் டாக்டர் வி.கே.பால்.

இது பற்றி பேசிய இந்தியாவின் கோவிட் -19 ஆலோசகர் டாக்டர் வி.கே.பால், “மக்கள் முதல் டோஸாக எந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்களோ அதே தடுப்பூசியைத்தான் இரண்டாவது டோஸாகவும் செலுத்திக்கொள்ள வேண்டும். இருப்பினும், மக்களுக்கு வெவ்வேறு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தாலும், கவலைப்பட தேவையில்லைஎனத் தெரிவித்தார்.

image

முன்னதாக உத்தரபிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்திலுள்ள பத்னி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20 கிராமவாசிகள் கோவிஷீல்ட் தடுப்பூசியை முதல் டோஸ் செலுத்திக்கொண்ட பிறகு, அவர்களுக்கு  கோவாக்சின் தடுப்பூசி இரண்டாவது டோஸ்க்கு செலுத்தப்பட்டது. இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது, ஆனாலும் “கலவையான” தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்கள் நன்றாக உள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டும் பாதுகாப்பாகவே உள்ளனர். சோதனை அடிப்படையில் தடுப்பூசிகளை கலந்து செலுத்த நாங்கள் யோசித்து வருகிறோம் “என்று சுகாதார நிலைய மருத்துவர் கூறினார்.

இது குறித்து சித்தார்த்நகர் மருத்துவ தலைமை அதிகாரி சந்தீப் சவுத்ரி கூறுகையில், “தடுப்பூசிகளை ‘கலவையாக’ செலுத்துவது குறித்து இந்திய அரசிடமிருந்து வழிகாட்டுதல்கள் எதுவும் வரவில்லை. எனவே இது அலட்சியம் காரணமாக நடந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட தடுப்பூசியை முதல் டோஸாக பெறுபவர், அதே தடுப்பூசியின் இரண்டாவது டோஸையும் பெற வேண்டும். தடுப்பூசி டோஸ்கள் மாற்றி போடப்பட்டது பற்றிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என அவர் கூறினார்.

Author: sivapriya