வங்காளதேச பெண்ணை இந்தியாவுக்கு கடத்தி பாலியல் சித்திரவதை செய்த 5 பேர் கைது

வங்காளதேச பெண்ணை இந்தியாவிற்கு கடத்தி வந்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்நாட்டைச் சேர்ந்த 5 பேர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன், ஒரு பெண் உள்பட ஐந்து இளைஞர்கள் கும்பலாக சூழ்ந்து நின்று ஒரு இளம்பெண்ணை தாக்குவதும் பாலியல் ரீதியாக சித்திரவதை செய்வதுமாக வீடியோ ஒன்று வடகிழக்கு மாநிலங்களில் இணையத்தில் வைரலாக பரவிவந்தது. இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரம் தெரியாமல் இருந்துவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வீடியோவில் உள்ளவர்களைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு சன்மானம் அளிக்கப்படும் என அசாம் மாநில காவல்துறை அறிவித்திருந்தது. 

இந்நிலையில் இளம்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சாகர் (வயது 23), முகமது பாபு சாஹிக் (30), ரிடோய் பாபோ (25)  ஹகில் (23) மற்றும் ஒரு பெண் ஆகிய 5 பேரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைதானவர்களும் பாதிக்கப்பட்ட பெண்ணும் வங்காளதேசம் நாட்டிலிருந்து வந்த ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை தேடுவதற்காக அண்டை மாநிலத்திற்கு போலீசார் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் அந்த பெண்ணை அங்கிருந்து இந்தியாவுக்கு கடத்தி வந்து, கொடுமைப்படுத்தி, அடித்து உதைத்து உள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மூத்த அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் முழு அளவில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பெங்களூரு நகர காவல் ஆணையாளர் கமல் பன்ட் தெரிவித்துள்ளார். 

Author: sivapriya