நிதி திரட்டும் முயற்சி – இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-வை வெளியிட பேடிஎம் திட்டம்!

இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவை வெளியிட பேடிஎம் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதற்கான முடிவை எடுப்பதற்கு நிறுவனத்தின் இயக்குநர் குழு காணொலி மூலம் இன்று கூடுகிறது.

2010-ம் ஆண்டு ‘கோல் இந்தியா’ நிறுவனம் ஐபிஓ மூலம் ரூ.15,000 கோடி திரட்டியது. இதுவரை இந்தியாவில் அதிக தொகை திரட்டப்பட்ட ஐபிஓ இதுதான். தற்போது பேடிஎம் சுமார் ரூ.21,800 கோடி திரட்ட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தளவுக்கு நிதியை திரட்டும் பட்சத்தில் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1.74 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

image

பேடிஎம் நிறுவனத்தில் பெர்க்‌ஷயர் ஹாத்வே, சாப்ட்பேங்க், அலிபாபா ஏஜிஹெச் ஹோல்டிங்க்ஸ், டிஸ்கவரி கேபிடல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. ஆண்ட் பைனன்ஸியல்ஸ் நிறுவனம் அதிகபட்சமாக சுமார் 40 சதவீத பேடிஎம் பங்குகளை வைத்திருக்கிறது. 2010-ம் ஆண்டு விஜய் சேகர் சர்மாவால் தொடங்கப்பட்டது பேடிஎம் நிறுவனம். இதில் இவருக்கு 14 சதவீத பங்குகள் உள்ளது. வரும் நவம்பருக்குள் ஐபிஓ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் வெளியேற விரும்புவதவாக தெரிகிறது. சில முதலீட்டாளர்கள் மொத்தமாக அனைத்து பங்குகளையும் விற்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மார்ச் 2020 உடன் முடிவடைந்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் வருமானம் ரூ.3,628 கோடியாக இருக்கிறது.

image

ஏற்கெனவே ஜொமோட்டோ நிறுவனம் ஐபிஓவுக்காக செபியிடம் விண்ணப்பித்திருக்கிறது. இது தவிர பாலிசி பஜார், நய்கா, டெல்லிவெரி, மொபிக்குவிக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட திட்டமிட்டு வருகின்றன.

ஒரு தனியார் நிறுவனம் மூலதனத்தை திரட்ட பொதுமக்களிடமிருந்து முதலீட்டை அணுகும் முறைதான் ஐபிஓ எனும் ஆரம்ப பொது வழங்கல்.

Author: sivapriya