திரவ ஆக்சிஜன் பயன்பாட்டுக்கான தடையால் ஸ்டீல் உற்பத்தி பாதிப்பு – விலை குறையுமா?

கொரோனா பாதிப்பு அதிகரித்தை தொடர்ந்து திரவ ஆக்சிஜனை மருத்துவம் அல்லாத பயன்பாடு அல்லது தொழிற்துறைக்கு பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்திருக்கிறது. இதன் காரணமாக ஸ்டீல் உற்பத்தி பாதிப்படைந்திருக்கிறது. மே மாதத்தில் சுமார் 20 நாட்கள் அளவுக்கு ஸ்டீல் உற்பத்தி நடக்கவில்லை. இதனால் நடப்பு நிதி ஆண்டில் சுமார் 8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஸ்டீல் உற்பத்தி குறையும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து கல்யாணி ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.கே.கோயல் கூறும்போது, “தற்போது ஆலையை நாங்கள் மூடி இருக்கிறோம். ஒரு மாதத்தில் சுமார் 20,000 டன் அளவுக்கு உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது ஆலை மூடப்பட்டிருக்கிறது. எப்போது திறப்போம் என தெரியவில்லை” என தெரிவித்திருக்கிறார்.

image

ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனமும் ஸ்டீல் உற்பத்தியை நிறுத்தி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் மூன்று மாநிலங்களில் (தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா) உள்ள ஆலையில் இருந்து தினமும் 1200 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு மருத்துவ பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகிறது.

சில வாரங்களாக உற்பத்தி குறைந்திருந்தாலும், அதே அளவுக்கு சந்தையில் தேவையும் குறைந்திருக்கிறது. இதனால் உற்பத்தி குறைப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என ஸ்டீல் நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

image

ஸ்டீல் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்திருப்பதால், விலை குறைந்தால் வாங்கலாம் என கட்டுமான நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தன. ஆனால், தேவை குறைந்திருந்தது. தவிர பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளும் இருந்ததால் தேவை குறைந்திருந்தது.

இந்த நிலையில், சில வாரங்களாக உற்பத்தி இல்லை. அதனால் ஸ்டீல் விலை மீண்டும் உயருமா அல்லது தேவை குறைவாக இருப்பதால் விலை குறையுமா என்பது வரும் வாரங்களில் தெரியவரும்.

Author: sivapriya