ம.பி: கொரோனா நோயாளிகளுக்கு மருந்து வாங்கித் தருவதாக ஏமாற்றிய மாணவர் கைது

கொரோனா நோயாளிகளுக்கு மருந்து வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய 18 வயது மாணவரை டெல்லி போலீசார் கைது செய்தனர்

கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் உள்ளிட்ட உயிர்காக்கும் மருந்துகள் பெருமளவில் பயன்படுகிறது. இதனால் பல மாநிலங்களில் ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஆன்லைனில் விளம்பரம் செய்து பொதுமக்களிடம் முன்பணம் பெற்று ஏமாற்றி வருவது அதிகரித்துள்ளது. அப்படியொரு சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நடந்துள்ளது.   

டெல்லியைச் சேர்ந்த  அங்கித் குமார் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது உறவினருக்கு 5-6 ரெம்டெசிவிர் குப்பிகள் அவசரமாகத் தேவைப்பட்டுள்ளது. ஆனால் அந்த மருந்து வெளியில் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து கூகுளில் தேடிய அவர், வர்திகா ராய் என்ற விற்பனையாளரின் தொடர்பு எண்ணை எடுத்து அவரை அணுகியுள்ளார். 5 குப்பிகளுக்கு ரூ.32,400 பணத்தை யுபிஐ மூலம் வர்திகா ராய்க்கு அனுப்பியுள்ளார். ஆனால் பணம் பெற்றுக்கொண்ட பிறகு வர்திகா ராய் மருந்து அனுப்பாமல் இருந்துள்ளார். இதையடுத்து அங்கித் குமார் டெல்லி போலீசில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில், வர்திகா ராயின் தொலைபேசி எண்ணை கொண்டு போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் மத்தியப்பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் உளவியல் முதலாமாண்டு பயின்றுவரும் வர்திகா ராய் என்பதும் மருந்து வாங்கித் தருவதாக ஆன்லைன் மூலம் தொடர்புகொண்டு இதுவரை 11 பேரை ஏமாற்றியதை போலீசார் கண்டுபிடித்தனர். 

வர்திகா ராயின் வங்கிக்கணக்கை முடக்கி யாரிடமிருந்து எவ்வளவு பணம் ஏமாற்றியுள்ளார் என்பது குறித்த விபரத்தை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Author: sivapriya