ரூ.31 கோடியில் அடுக்கு மாடி குடியிருப்பை வாங்கிய அமிதாப் பச்சன்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ரூ.31 கோடி மதிப்பில் மும்பை அந்தேரியில் அடுக்கு மாடி குடியிருப்பை வாங்கி இருக்கிறார். 5184 சதுர அடி உள்ள டூப்ளெக்ஸ் குடியிருப்பு இது. விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது ஒரு சதுர அடி ரூ.59,788-க்கு வாங்கப்பட்டிருக்கிறது.

மும்பையில் உள்ள கிரிஸ்டல் குரூப் என்னும் குழுமம் இந்தக் குடியிருப்பை கட்டி இருக்கிறது. 28 மாடியில் இந்த வீடு அமைந்திருக்கிறது. தவிர ஆறு கார் பார்க்கிங் வசதியும் உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் வாங்கப்பட்டிருந்தாலும் ஏப்ரலில் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக பதிவு கட்டணம் மட்டும் 62 லட்சம் ரூபாய் (மொத்த தொகையில் 2%) செலுத்தப்பட்டிருக்கிறது.

image

ரியல் எஸ்டேட் துறையில் மந்த நிலை இருப்பதால் பதிவுக் கட்டணத்தை மஹாராஷ்டிரா அரசு குறைத்தது. கடந்த ஆண்டு டிசம்பர் வரை 2 சதவீதமாகவும், மார்ச் 2021 வரை 3 சதவீதமாகவும் பத்திர பதிவு கட்டணம் இருந்தது. தற்போது 5 சதவீதமாக இருக்கிறது.

பத்திர பதிவு கட்டணத்தை குறைத்ததால் பல நட்சத்திரங்களும், நிறுவனங்களின் தலைவர்களும் ரியல் எஸ்டேடில் முதலீடு (கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் மார்ச் 2021 வரை) செய்திருப்பதாக தெரிகிறது.

இதர பாலிவுட் நட்சத்திரங்களான சன்னி லியோன் மற்றும் ஆனந்த் எல் ராய் ஆகியோரும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை வாங்கி இருக்கிறார்கள்.

Author: sivapriya