பிரியாணியால் கடுப்பான அமைச்சர்… கலாய்த்த ஓவைசி… – கலகலப்பான ட்விட்டர் தளம்

பிரியாணியால் தெலங்கானா அரசியல் களமும், நெட்டிசன்களும் ட்விட்டரை கலகலப்பாக்கி கொண்டு வருகின்றனர். அதன் பின்னணி இதுதான்…

எப்பொழுதும் பிரியாணி என்றாலே அதை விரும்பி உண்ண பெரும்பாலான மக்கள் காத்திருப்பார்கள். இந்தியளவில் மிகவும் சிறப்பு வாய்ந்த பிரியாணி எனப்படுவது ஐதராபாத் தம் பிரியாணி. இப்படி பிரியாணிக்கு புகழ்பெற்ற ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் ட்விட்டரில் வெளியிட்ட ஒரு பதிவு அரசியல்வாதிகள் முதல் ஐடி எம்பிளாயி வரை வைரலாகி கொண்டிருக்கிறது. தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு ட்விட்டர் பயனர், சொமோட்டோவில் ஆர்டர் செய்த பிரியாணி குறித்து புகார் ஒன்றை ட்விட்டரில் தெரிவித்திருந்தார். புகாரோடு நிற்காமல், தெலுங்கானாவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ்வையும் டேக் செய்திருந்தது சுவாரஸ்யம் அளிப்பதாக இருந்தது.

image

THOTAKURIRAGHU1 என்ற ஐடி கொண்ட அந்த ட்விட்டர் பயனர் தான் வாங்கிய பிரியாணியின் படத்தை ட்விட்டரில் பகிர்ந்து, “நான் சிக்கன் பிரியாணியை கூடுதல் மசாலா மற்றும் லெக் பீஸுடன் ஆர்டர் செய்திருந்தேன். ஆனால் நான் ஆர்டர் செய்த எதுவும் அந்த பிரியாணியில் இல்லை. இது தான் மக்களுக்கு சேவை செய்வதற்கான வழியா” என்று பதிவிட்டு அமைச்சர் கே.டி.ராமராவ்வையும் டேக் செய்திருந்தார். பின்னர் சில மணி நேரங்களில் அந்த டுவீட்டை டெலீட் செய்துவிட்டார். எனினும் அதற்கு அமைச்சர் கே.டி.ராமராவ் பதில் கொடுத்திருந்தார். அவரு எரிச்சலுடன் பதிவிட்டிருந்தாலும் நெட்டிசன்கள் மத்தியில் அது கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

தெலுங்கானாவின் கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்தைக் கையாளும் பணிக்குழுவின் தலைவரான அமைச்சர் கே.டி.ராமராவ், தனது பணிகளுக்கு மத்தியிலும் அந்த நபரின் ட்வீட்டுக்கு, “இதில் ஏன் பிரதர் என்னை டேக் செய்திருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்” என்று ஸ்மைலியுடன் பதிவிட்டிருந்தார்.

image

அடுத்தடுத்த இந்த ட்வீட்கள் வைரலாக, இவர்களுடன் ஹைதராபாத் எம்பியும், AIMM கட்சித் தலைவரான அசாதுதீன் ஓவைசியும் சேர்ந்துகொண்டார். அவர் தனது பதிவில், “கே.டி.ஆர் அலுவலகம் இந்த விவகாரத்தில் பதில் அளிக்க வேண்டும். அமைச்சர் கே.டி.ஆர் மற்றும் அவரது டீமும், இந்த தொற்றுநோய்களின் போது மக்களின் மருத்துவ தேவைகளுக்கு பதில் அளிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இப்படி அரசியல்வாதிகள் அடுத்தடுத்து ட்வீட்களால் சிரிக்க வைக்க நெட்டிசன்களும் வழக்கம் போல தங்கள் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். ஹைதராபாதிகளையும்.. பிரியாணியையும், பிரிக்க முடியாது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாகி இருக்கிறது.

Author: sivapriya