ஆந்திரா: மகளின் காதலனை வயலுக்கு வரவழைத்து கொன்ற தந்தை

மகளை காதலித்த இளைஞரை தந்தையே கொலை செய்த பயங்கரச் சம்பவம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

பலமனேரி மண்டலம், போங்கராகுண்டா கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவரது மகள் சைலஜாவை அதே ஊர்க்காரரான தனசேகர் காதலித்துள்ளார். பெங்களூருவில் ஓட்டுனராகப் பணிபுரிந்த வந்த அவர், முழு முடக்கத்தால் சொந்த கிராமத்திற்கு வந்து தங்கியிருந்தார். அப்போது தனசேகர் – சைலஜா இடையிலான காதலை அவரது தந்தை பாபு அறிந்துகொண்டார்.

தனது மகள் சைலஜா மூலமாக அவரது காதலன் தனசேகரை, பாபு வயலுக்கு அழைத்துள்ளார். பின்னர் சைலஜாவின் தந்தையைப் பார்க்கச்சென்ற தனசேகரை காணவில்லை என்று அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக விசாரித்த காவல்துறையினர், தனசேகரின் கைப்பேசிக்கு வந்த அழைப்புகளை சோதனை செய்தபோது, அவர் கடைசியாக பாபுவிடம் பேசியது தெரியவந்தது. பிறகு பாபுவைப் பிடித்து விசாரித்ததில், தனசேகரை கொன்று வயலில் புதைத்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

இதனையடுத்து தனசேகரின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாபுவை காவல்துறையினர் கைது செய்தனர்.

Facebook Comments Box
Author: sivapriya