’’வில்லியம் ஷேக்ஸ்பியர் காலமானார்’’ – தவறாக வாசித்த செய்தியாளர்.. வைரலாகும் வீடியோ

அர்ஜெண்டினா ஊடகச் செய்தியாளர் ஒருவர், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரபல எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் உயிரிழந்து விட்டதாக கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முதல் கொரோனா தடுப்பூசியை முன்வந்து எடுத்துக்கொண்டதன் மூலம் பிரபலமானவர் இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் பில் ஷேக்ஸ்பியர். இவர் பைசர் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். 81 வயதைக் கடந்த இவர் தற்போது, கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட மருத்துவமனையிலேயே காலமாகியுள்ளார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

image

இந்தச் செய்தியை ஊடகத்தில் வாசித்த அர்ஜெண்டினா செய்தியாளர், “ நாம் அனைவரும் அறிந்த, ஆங்கிலத்தில் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர், கொரோனா தடுப்பூசியை முதல் நபராக எடுத்துக்கொண்டவர் தனது 81 வயதில் இங்கிலாந்தில் இறந்துள்ளார்” என்று வாசித்தார். வில்லியம் பில் ஷேக்ஸ்பியரை குறித்தான இறப்பு செய்தியை வாசிக்க வந்த செய்தியாளர், எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் குறித்தான தகவல்களை வாசித்தது சமூகவலைதளங்களில் நகைப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இது தொடர்பான வீடியோவும்  வைரலாகி வருகிறது.

Author: sivapriya