லட்சத்தீவுக்கு ஆதரவாக பிரித்விராஜ் வெளிப்படுத்தியது நமது சமூகத்தின் உணர்வு: பினராயி விஜயன்

லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாகப் பேசி பாஜகவினரின் விமர்சனங்களுக்கு உள்ளான நடிகர் பிரித்விராஜுக்கு ஆதராவக கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.

யூனியன் பிரதேசமான லட்சத்தீவு நிர்வாகியாக நியமிக்கப்பட்ட பாஜகவை சேர்ந்த புரபுல் கோடா பட்டேல், ‘மாட்டிறைச்சிக்கு தடை, மதுபான கடைகள் திறப்பு அறிவிப்பு, பிராணிகள் பாதுகாப்புத் திட்டம்’ போன்ற பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியிருப்பது, அம்மக்களிடையே பெரும் கண்டங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அவரின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக, நடிகர் பிரித்விராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில், “தற்போது லட்சத்தீவில் நடைபெறும் பிரச்னைகள் குறித்து அம்மக்கள் தொடர்ந்து என்னிடம் கூறி வருகின்றனர். தீவுகளில் நடக்கும் பிரச்னைகளை பொதுவெளியில் வெளிப்படுத்த வேண்டும் என்று என்னிடம் தெரிவித்துள்ளனர்.ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. அது, அங்கு நிகழ்ந்துள்ள மாற்றங்கள் நிச்சயம் அங்குள்ள மக்களுக்கு ஏற்றதல்ல என்பதுதான். தீவு மக்கள் அங்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய அதிகாரியினால் மகிழ்ச்சியாக இல்லை. அங்கு நிலவி வரும் பிரச்னையைப் பற்றி அந்த மக்களிடம் அரசு கேட்க வேண்டும்” என்று லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தார். இதற்கு, பாஜகவினர் பலரும் கண்டனங்களோடு விமர்சனமும் தொடர்ச்சியாக செய்து வந்தனர்.

image

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், “ பிரித்விராஜ் வெளிப்படுத்திய உணர்வு நமது சமூகத்தின் உணர்வு. இது கேரளாவில் வாழும் எவருக்கும் இயல்பாக வரும் ஒரு உணர்வு. பிரித்விராஜ் அதனை சரியான வழியில் வெளிப்படுத்தியுள்ளார். அவரைப்போலவே, பலரும் தங்கள் கருத்தைக்கூறி முன்வர தயாராக வேண்டும்.

சங்பரிவார் அமைப்பினர் எல்லோரிடமும் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை பின்பற்றுகிறார்கள். பிரித்விராஜுக்கு எதிராகவும் அதே சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை பின்பற்றுகிறார்கள். அதற்கு, நம் சமூகம் உடன்படவில்லை. சகிப்புத்தன்மையற்ற சங்பரிவார் அமைப்புகளுக்கு நம் கேரளா எப்போதும் எதிராக நிற்கும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box
Author: sivapriya