கொலை வழக்கில் திடீர் திருப்பம்… அப்ரூவராக மாறும் நண்பர்… – சுஷில் மீது இறுகும் பிடி!

சக வீரரை கொலை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சுஷில் குமார் வழக்கு தொடர்பான விசாரணையில், அவரின் நண்பர்களில் ஒருவர் அரசு தரப்பு சாட்சியாக மாற ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக 2 பதக்கங்களை வென்றவர் மல்யுத்த வீரர் சுஷில் குமார். சுஷில் குமாருக்கும் சக வீரரான ராணா தன்கட்டுக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் ராணா தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தன்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர். மோசமான காயங்களுடன் கிடந்த தன்கட்டை, அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால், சிகிச்சைப் பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார்.

image

இதனையடுத்து தலைமறைவாக இருந்த சுஷில் குமாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சுஷில் குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் சுஷில் குமார் உடன் தொடர்புடையவர்கள் மொத்தம் 12 பேர். இதில் சுஷில் குமாரை கைது செய்யும்போது அவருடன் சேர்த்து அவரது கூட்டாளிகளான மேலும் 4 பேரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். அவர்களில் பூபேந்தர், மோகித், குலாப் ஆகிய 3 பேர் ஹரியானா மாநிலத்தின் ஜஜ்ஜார் மாவட்டத்தையும், மன்ஜீத் என்பவர் ரோத்தக் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.

இந்த வழக்கில் நேற்று 9-வது குற்றவாளியாக சுஷில் குமாரின் நண்பரான பிந்தர் என்பவரும் கைது செய்யப்பட்டார். மல்யுத்த வீரரான இவரும் சாகர் ராணாவை கடுமையாக தாக்கிய கும்பலில் இருந்துள்ளார். இவர், போலீஸ் விசாரணையில், சுஷில் குமாரின் அறிவுறுத்தலின்பேரிலேயே ராணாவை தாக்கியதாக ஒப்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் சுஷில் குமாரின் நெருங்கிய நண்பரான பிரின்ஸ், அரசு சாட்சியாக மாறுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பிரின்ஸ், ராணா தாக்கப்பட்டபோது அதனை வீடியோ எடுத்துகொண்டுள்ளார். முன்னதாக தாக்குதலை வீடியோ எடுக்க சுஷில் குமார்தான் தன்னிடம் கூறியதாக பிரின்ஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது அந்த வீடியோவையும் ஒப்படைத்து, அரசு சாட்சியாகவும் மாற அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், கொலை வழக்கில் சுஷில் மீதான பிடி இறுகுவது தெளிவாக தெரிகிறது.

image

இதற்கிடையே, வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், தப்பியோடிய பிரவீன், பிரதீப் மற்றும் வினோத் பிரதான் ஆகிய மற்ற 3 பேரையும் போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.

முன்னதாக, ராணாவுக்கு பாடம் கற்பிக்கவே நினைத்ததாகவும், அவரை கொலை செய்யும் எண்ணம் தனக்கில்லை என்றும் சுஷில் குமார் டெல்லி காவல்துறையினரின் விசாரணையில் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கின்றன.

Facebook Comments Box
Author: sivapriya