ஹோட்டல்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: மத்திய அரசு

தனியார் மருத்துவமனைகள் ஹோட்டல்களுடன் இணைந்து கொரோனா தடுப்பூசிக்கான தொகுப்பினை(package) வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு  மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் மனோகர் அக்னானி எழுதிய கடிதத்தில், “சில தனியார் மருத்துவமனைகள் சில ஹோட்டல்களுடன் இணைந்து கோவிட்-19 தடுப்பூசிக்கான தொகுப்பை வழங்குகின்றன என்பது மத்திய சுகாதார அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இது தேசிய தடுப்பூசி திட்டத்திற்காக வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு எதிரானது. நட்சத்திர ஹோட்டல்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அத்தகைய நிறுவனங்களுக்கு எதிராக தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும்என்று குறிப்பிட்டுள்ளார்.

image

கோவிட் தடுப்பூசி வழிகாட்டுதல்களின்படி, அரசு கோவிட் தடுப்பூசி மையம், தனியார் மருத்துவமனைகளால் நடத்தப்படும் தனியார் கோவிட் தடுப்பூசி மையம், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கோவிட் தடுப்பூசி மையம், தனியார் நிறுவனங்களில் தனியார் மருத்துவமனைகளால் நடத்தப்படும் கோவிட் தடுப்பூசி மையம், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வீடுகளுக்கு அருகிலேயே நடத்தும் கோவிட் தடுப்பூசி மையம், சமூக மையங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், பள்ளிகள் / கல்லூரிகள், முதியோர் இல்லங்கள் ஆகிய இடங்களில் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Author: sivapriya